இறுதி

யாரோ சொன்னார்
தொடங்கிவிட்டது என்று
பெயரிடுதல் பூச்சூட்டல்
வளைகாப்பு, பிறப்பு
எனும் சுழற்சியின்
தொடக்கமறியாமல்
தொடங்கிவிட்டது
என்றனர்.
நின்ற இடத்தில்
நின்று கொண்டிருக்க
சுற்றிச் செல்லும்
உலக இயக்கம்
உள்ளும்
புறமுமாய்
தொடக்கம்
முடிவின்றி
பாழ் வெளியின்
பாதாளத்தில்
அண்ட கோளத்தின்
ஆரணுவாகி.

த்வனி

மாற்றாதே!
உன் ஸ்வரங்களை.
மாற்றங்கள்
மறுக்கமுடியாதவை
என அறிந்தாலும்...
நான் அறிந்த நீ
நீ அறிந்த நான்
என்றும் மாறாமல்
இருக்க
வேண்டுமெனும் மனது.
காற்றில் அசையும்
திரைச்சீலை,
சீற்றத்தில் ஆடலாம் மனது.
ஆயினும்
உன் ஒவ்வொரு மௌனமும்
என்னுள் நிலநடுக்கத்தை
உருவாக்கவல்லன என அறிந்து
கொள்.
உன் சொல்லின் ஒவ்வொரு
அட்சரமும்
பதம் பார்த்து சுவைத்து
உண்டவை.
அதில் ருசி பேதம்
எழும்போது
சுடும் நாக்கு..
இதயத்துடிப்பு
சீராக இருத்தல் போல்
இருக்கவே விரும்புகிறது
நம் உறவு.
மாற்றங்கள்
மறுக்கமுடியாதவை
எனத்தெரிந்த பின்னும்