கவிதையின் வழி..

என் கண்மணி வா!


என் கண்மணி வா! என்றேன்
வந்தாய்...
ஓடி வா!..ஓடிவா! என்றேன்

களிற்றுக்குழவி போல்
ஓடி வந்தாய்.
உன்னைக் கட்டி அணைத்து
முத்தம் சொரிந்து
பட்டுக் கன்னத்தில்
மெல்லப் பதிந்து
செல்லமே, உயிரே
என்று மூர்ச்சையாகும்
தருணத்தில்....
தாடி குத்துகிறது போ!
என்று ஓடி மறைந்தாய்.
தாடி மறைய வைத்தியமும் இல்லை
தாயாகி மகிழ சாத்தியமுமில்லை.
கண்மணி வா! என்று
பயித்தியமாய்
மீண்டும் நான்.

~~~~~~~~~~~~~~~~~

காலத்துள் நான்

காலமாகிவிட்டார் எனும் போது
கை நழுவி விட்டார் என்று பொருள்
உள்ளங்கைத் தண்ணீராய் நழுவி
ஓடுகிறது காலம்
உன்னோடு ஒட்டச் சொல்லி
வந்து வந்து நிற்கிறாய் கனவில்
யயாதி போல் காலத்தை
மீடுத்தரவல்லவொரு பிள்ளை
பெற்றேன் இல்லை நான்
காலத்தின் ஓட்டத்தில் கைகோர்த்து
களைத்து பின் காலமாகிவிடுதல் போலும்
ஆனாலும்..
காலம் என் கைவசம்தான்
என்றேன். நீ புன்னகைத்தாய்
உன்னை நான் இப்போது
உணர்தல் போலும்
காலத்தையும் உணர்கின்றேன் காண்
என் புணர்ச்சியின்றி
காலம் இல்லை காரிகையே!
உன் கைக்குள்
நானில்லை ஆனால்
உன் காலத்துள் நான்.

~~~~~~~~~~~~~~~~~~~~

அதேநான்

வந்தது சூரியன்
புலர்ந்தது காலை
இன்னொரு காலை
இதே சூரியன்
அதே நான்
அதே அலுப்புடன்
மோட்டிலிருந்த என்
கண் கடற்கரைக்குத்
தாவியபோது
அதே அழுக்குப்பிடித்த
பாவாடை, மூக்குவழியும் சிறுமி
தினம் தேடுகிறாள்
மண்ணுள் குடைந்து
அலுக்காமல் சலிக்காமல்
அதே கரை, அதே சிறுமி
அடுத்த நாளுள்
பிரவேசிக்கும்
அதே நான்.

~~~~~~~~~~~~~~~

எனக்கே மறந்து போன(என்)'கவிதைகள்!

இன்று கணினிக்குள் உலா வரும் கடலளவு கவிதைகளில் கடுகளவு!

விரகம்

சினிமாவுக்குப் போன
சித்தாளாகிப் போனது
மனது
ரொம்பக்
கஷ்ட்டப்பட்டுத்தான்
கட்டுப்படுத்திக்
கொள்கிறேன்
கட்டிக் கொள்ளத்
துடிக்கும்
மனதை

***************************

தெரு


சூரிய கிரகணத்துத் தெருவில்
கிடந்த என் வீடும்
பூட்டித்தான் கிடந்தது,
பஞ்சாங்கம் பார்த்து
வேளை பார்த்து
மூடிய கதவைத்
திறந்த போது
தேவதைத் தெருவில்
போனதாக
பக்கிரி
சொன்னான்.

****************************

விளாம்பழம்

முகமறியாப் பேதையுடன் நான்
உறவுகொண்ட போது
யயாதியாகியிருந்தேன்.
பயணத்தின்
இறுதியிலிருந்த
நான் தந்த
முத்தம்
வரண்டு
போயிருந்தது.

உன்
முத்தம்
வேண்டாம்!

என் ஜீவனை
உருக்கும்
உன் தமிழை தா!
அறிவை தா!
பசியாக இருக்கிறேன்
என்றாள்.

அடுக்கிலிருந்தேல்லாம்
அள்ளிக் கொடுத்தபின்
நிறைந்திருந்தது
அன்பு
ஒன்றுதான்
அதைத்தான்
அந்த
முத்தத்தில்
தந்தேன்
என்றேன்.

கனிந்த
பழங்களில்
சில
வரண்டிருப்பது
உண்டு
என்று
அவள்
அப்போது
கண்டு
கொண்டாள்.


****************************


துகள்/அலை ?

முற்றுப் பெறாத
தேடலாக முடிந்து
விடுமோ
வாழ்வு என்றொரு
கவலை வருகிறது.

ஆரம்பத்தில்
அவள்
தந்த
பார்வையெல்லாம்
நொடியில்
ஒடிந்து விழும்
சேதிகள்தான்.

ஆரம்பித்த பின்னும்
அவள் தந்த சேதி
தந்தி மொழியாய்
கோர்வை இல்லாமல்

அவள் தந்த நூல்
கோடிட்டு நிரப்ப
முடியாத
வினாத்
தாள்களாய்...

வெளியில்
அலைபோல்
தெரியும்
வாழ்வு
துகளாய்
சிதறி
விடுவதுதான்,
நிகழ்வு.

***************************

துளி

மாங்கன்றை நட்டு விட்டு
மாங்கனிக்கு காத்திருந்த
நாட்கள் எத்தனை?
அத்தனை வருடங்களையும்
உண்டு விட்டு
தள, தளப்பாய்
சிலிர்த்து
மலடாகிப் போவதும்
உண்டு, மாமரம்!
ஆயின்,
அத்தனை நாட்களின்
சங்கமமாய்
நல்ல கனி கொடுப்பதும்
உண்டு.
கூடும் பொழுதுகளின்
சேர்க்கை விதையாகிப்
போகாமல்
பதராகிப் போகும்
என்றும் அன்று
அறிந்தேனில்லை.

வாத்தியார் சொல்கிறார்
கல்ப கோடி ஆண்டுகளின்
தயாரிப்பில் ஜனிப்பது
முதல் வித்து
அது விரியும்
போது
பொழுதுகளும்
விரிகின்றன
புவனங்களும்
விரிகின்றன
என்று.

கூடலும், காமமும்
கூட
பெரிய தயாரிப்பின்
பின்தான்
திகைக்கிறது.
சங்கமிக்கும்
பொழுதில்
புணர்பவர்
காண்கிலர்
பொழுதுகளும்
காண்கின.

சதம் போட்டு விட்ட
பாட்டியின் கடிகார
நினைவில்
ஒரு சில நொடிகளே
ஜொலிக்கின்றன.
அப்போது
நான் காண்பது பாட்டியா?
இல்லை கன்னியாகுமரியா?

கணங்களின் ஆற்றில்
ஓடு மீன், ஓட
ஒரு மீன் வருமளவும்
காத்திருப்பதுதான்
வாழ்வா?

பொழுதுகளின்
கூட்டம் முகிலாய்
அலைகின்றன.
என் துளி விழும்
வரை
சற்றும் அயராது
காத்திருக்கும்
சக்கிரவாகப்
பறவையாய்
நான்.


***************************


மாராப்புச் சேலை


நீ அறியப்படாமலே
இரு அன்பே!
அறிந்தும் அறியாமலும்
தொட்டும் தொடாமலும்
இருப்பதே சுகம்
எட்ட இருக்கும்
சந்திரன்
எட்டி இருத்தலும்
கிட்டடியின்
குழிகள்
கிட்ட
இருத்தலுமே
சரி
விரிக்காமலிருக்கும்
புகையிலை போல்
பூடகமாவே
இரு
புரியாத
கவிதைக்குத்தான்
பூமியில்
புகழ்!
மறைக்கும்
வரைதானே
மாராப்புக்கு
மதிப்பு


******************************

அட யோகம்!

உன் கதையைக் கேட்டபோது
சிங்காரிச் சித்திதான்
நினைவிற்கு வந்தாள்!
பேருதான் சிங்காரி,
கழுத்து கொஞ்சம் கோணல்
பார்வையும் அப்படியே.
அம்மாவுக்கு
ஒன்றுவிட்ட
உறவு.
ஓடி ஆடும் போது
இவள் மட்டும்
கண்ணீரும்
கம்மலையுமாகக்
கதை சொல்லிக்
கொண்டிருப்பாள்.
என்ன துக்கம்
என்ன சோதனை
என்ன விரக்தி
என நான்
அன்றறியாதவற்றை
அன்று
தந்த
முத்தத்தில்
அந்தவொரு
அணைப்பில்
அன்றே
தந்து விட்டாள்
என்று
இன்று
நான்
உணர்கிறேன்.


***************************

தாக்கம்

யமுனா!
இந்தப் பேரைச் சொல்லும் போதே
அமுதூறுகிறது.
ஆனால் உனக்கேன்
அந்தத்திமிர்?
அவன் காதலிக்கவில்லையெனில்
நான் உன்னைக் காதலித்திருக்கவே மாட்

டேன்.
அவன் பார்வையில் நீ
சொர்ண விக்ரஹம்
அழகின் அழகு
ஆதிசயத்தின் அதிசயம்
ஆனால் நீயோ
அன்றும்
இன்றும்
என்றும்
ஒரு
மரப்பசு.
சண்டாளி!
எல்லோரையும்
தவிக்கவிட்டு
மண்ணோடு
மக்கிப் போனாய்.
போ!
மண்தான்
மரப்பசுக்களுக்கு
லாயக்கு!


***************************


வீட்டுக்காரர்

உன்னை
நான்
அறிந்தேன்
என்று சொல்வது
அறியாமை.
என்னால்
அறியப்படமுடியாத
உன்
உள்ளறைகளுள்
ஒன்றை
தற்காலிகமாய்
திறந்து விட்டிருக்கிறாய்
பயணியாய் தங்கிப் போக.
அந்த அறையிலிருந்து
கொண்டு
ஊருக்கு
நான்
சொன்னேன்
நான்
அவள்
வீட்டுக்காரர்
என்று.


*********************************

இந்தியந்தாதி


வெட்ட வெட்ட முளைக்கும்
இராவணன் தலையாய்

தலை வழிக்க, வழிக்க
வளரும் முடியாய்

முடிவே இல்லாத
ஏழையின் சோகமாய்

சோகத்தை அகற்றவரும்
அரசியல் கோஷமாய்

கோஷத்தில் மறைந்திருக்கும்
பொய்மையின் தொடர்ச்சியாய்

தொடரத் தொடரும்
சிந்துபாத் கதையாய்

கதையுள் கதையாய் பின்னித்
தொடரும் காவியமாய்

காவியுடைச் சாமிகளின்
விமோசன வழிகளாய்

வழி, வழியாய் வந்து நிற்கும்
வர்ணாசிரம தர்மமாய்

தருமத்தின் பெயரில் நடக்கும்
நூற்றாண்டு ஊழலாய்

ஊழலில் வயிறு வளர்க்கும்
ஒட்டுண்ணி நாய்களாய்

நாயின் வாலாய்! நிமிர்த்த
முடியாத பெரும் வளைவாய்

வள நாடு வளரும்
வாழையடி வாழையாய்

வாழையடி வளர்
வலிதான புல்லாய்

வெட்ட வெட்ட
எட்டிப் பார்க்கும்
சாதீ யம்!

வாழ்க பாரதம்!


*********************************


அக்கினிக் குஞ்சின் கதை

அழுத்தம்
மிகப்பெற
அக்கினி
பிறந்தது.
அதுவே
ஆதியில்
இருந்தது.
அக்கினி
அழிக்கும்
என்பதால்
ஆவியுடன்
சேர்ந்து
அடங்கிப்போனது.
அரிக்கன்
விளைக்கை
சுற்றும்
போது
ஆபத்தொன்றுமில்லைதான்
அடிதான் படும்.
நெருப்பைச் சுற்றாதே
புடம் போடப்படுவாய்
என்று பொற்கொல்லன்
சொல்லும் போதே
அகல் விளக்கொளியில்
விட்டில்
புகுந்தது.
அக்கினி
சிரித்தபோது
ஆவி பிரிந்தது.
ஆதியில்
அக்கினியே
எஞ்சியது.


****************

ரட்சகன்

உங்கிட்ட பொய் சொல்லி
பிரயோசனமில்லை
அடைக்கலமென நான்
அலைந்து மாய்ததில்லை
அரை நூற்றாண்டு
அனுபவித்தில்
இன்றுதான்
தோன்றியது
உன்னிடம்
வரலாமென்று
நீ எப்படிப்பட்ட
ஆளுன்னு எனக்குத் தெரியாது
நீ கற்பனைப் பொருளா?
கற்பக தருவா?
தெரியாது.
என்னுள்
அடைக்கலம் தேடும் திறன்
இன்றுவரை கைவரப்பெறாததால்
உன்னிடம் வரலாமாவென ஒரு
யோசனை.
என்னுள் நான்
அடைக்கலம் கொண்டால்
எப்படி இருக்குமோ
அப்படியே
உன்னுள்
அடைக்கலம் புகும்போதும்
இருக்க வேண்டும்
என்பதே
இப்போதைய
பிரார்த்தனை.

ஆமென்.


*********************************

இலக்கு

அன்றொருநாள் ஓவியம் தீட்டினேன்,
மயிலைப் பார்த்து அச்சாக வரைந்தேன்
என்று எண்ணும் போதே
அது குயிலாக வந்து நின்றது
தோடியை பிடிப்பதாக
நினைத்துக் கொண்டு
முகாரி பாடியிருக்கிறேன்.
மாங்காய்க்கு குறி வைத்து
விளாம்பழம் பெற்ற
நாள் உண்டு.
நெளிவுகளில் ஓடும்
ஆற்று நீர் போல்
பிடிபடாமலே
போகிறது
மனது.
இலக்கிழந்த
தோட்டாக்களாய்
வெளியெங்கும்
என் கவிதை.

*******************************

பட்சி

யாரும் யாரை விட்டுப் போவதில்லை
ஏனெனில்
யாரும் யாருக்குள்ளேயே இருக்கின்றனர்
என்று பட்சி சொன்னபோது
புரியவில்லை.
ஆனால் இன்று நீ
என்னைவிட்டுப் போனபின்
அது புலப்படுகிறது.
தந்தை இறந்துவிட்டாரென்று
அடித்துப் புரண்டு கொண்டு
விமானம் ஏறினாய்.
அடுத்த மாதம் உன் சகோதரியின்
குரலில் அவர் ஒளிந்து
கொண்டிருக்கிறார் என்று
நான் கண்டு
அதைச் சொன்னபோது
நீ நம்பவில்லை.
ஆனால் இன்று நீ
என்னை விட்டுப் போன பின்பு
உன் பெண்ணின் குரலில்
நீ இன்னும் ஒளிந்து
விளையாடுகிறாய்
என்றபோது
நம்புகிறாய்!
தோழீ!
அது என்னை விட்டு
விலகி விட்டது என்னும் போதே
அதைச் சொல்ல வைக்கும் நினைவு
இன்னும் என்னுள்ளே ஒட்டியே
உள்ளது என்பதை
அறிவாயோ?
அலை துரத்த
கரைத்தட்டிப் போகும்
கடல் போன்றது
வாழ்வு.
கடலும் எங்கும் போவதில்லை
கரையும் எங்கும் போவதில்லை.
இடையில் அலையும்
அலையென மனது!
பட்சி சொன்னது
புரிகிறது.

***********************************

ஒளிச்சேர்க்கை

பறப்பது உயர்வானதே
ஆனால்
பறப்பதால் மட்டும்
உயர்வு வருவதில்லை.
நேற்று இராப்பூரா
வட்டச் சட்டியின்
உள்ளிருக்கும்
விளக்கொளியை
உண்டுவிடத்
துடித்து
முட்டி
மோதிய
வண்டு
காலையில்
மல்லாக்க
மரித்துக் கிடந்தது!
வலை இருப்பதை
அறியா அந்துப்பூச்சி
ஒளியை நோக்கி
இரவெல்லாம்
தவமிருந்து
காலையில்
சொர்க்கம்
கண்டது.
பூச்சிகளை
பறவைகள்
உண்ணும்
என்பதால்
அவை
பூச்சி
ஆகிவிடுவதில்லை.
விட்டு விலகி
நிற்கும் அந்த
சிட்டுக் குருவிகளிடம்
கற்க வேண்டியது
விடுதலை.
ஆம்!


**********************************

நகர்வு

நகர்ந்த வண்ணமே
உள்ளது
நாற்றிசைப் பிரபஞ்சமும்.
காலையில் எழுத்த சூரியன்
கால் கொண்டு நிற்பதில்லை.
விடியாத இரவென்று
விரித்து யாரும்
உரைத்ததில்லை.
மொட்டாகிப் பூவாகி
காயாகிக் கனியாகி
மரமாகி, மண்ணாகி
மக்காகி
விழும் விதைக்குரமாகி
நகர்ந்து கொண்டே
இருக்கிறது வாழ்வு.
நிலைக்குத்தி நிற்க
பூமியில் இடமில்லை.
புவனமும் சுழற்சியில்.
பூப்பூத்த நாளில்
பார்த்தது போலவே
புரியாமல் நிற்கிறாய்
சுழற்சியை
எம்பிக்கொண்டு.
வா!
நிலைக்குத்தும்
இந்நினைவோடு
மண்ணில் சேர்ந்து
மக்கி மரமாகும் வரை!


***************************************


வனநேயம்

கன்று எடுத்து,
தொட்டி வைத்து தண்ணீர் ஊற்றி,
வேலிகட்டி, மரநடு விழாவில்
வனத்தின் தேவை குறித்துப் பேசி
சூழலுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டு
வீடு திரும்பியபோது தபாலில் கவிதை கேட்டுக் கடிதம்.
வளர்ந்த பசு மரங்கள் என்னை வணங்கிக்
கேட்டுக்கொண்டபடி
ஒடித்து நெளித்து சுற்றி வளைத்து பதுங்கிப்பாய்ந்து
பயமுறுத்தும் கவிதை செய்யாமல்
ஒத்தைப்புள்ளியில் கவிதையின் சாராம்சம் சொல்லி
திறந்த போனாவை மூடி வைத்து நிம்மதிய¡ய்
உறங்கிப்போனேன்.

தேடிச் சொல்

என்ன அப்படிப் பார்க்கிறாய்?
இடைப்பட்ட நேரத்தில்
நம் உலகங்கள் மாறிவிட்டன.
பாதி நீ சிருஷ்டித்தது மீதி நான்.
உலகங்களை உருவாக்குவதொன்றும்
பிரம்மப்பிரயர்த்தனமல்ல.
குழந்தையில் உருவாக்கிய உலகங்களை
பிற குழந்தைகளுக்கு விட்டுவிட்டு பின்
கூட்டுப்புழுவாகி வேறொரு உலகில்
சஞ்சாரித்து...ஆங்!
அங்குதான் உன்னைச் சந்தித்தேன்.
கலந்தோம் களிப்புற்றோம்
காலங்கள் பறந்தோடி
வேறொரு உலகில் மீண்டும்
சந்திக்கிறோம்.
இடையில் தோன்றிய என்னுலகு
நீ அறியாய், உன்னுலகு நானறியேன்.
உலகிற்குள் உலகென்று ஒவ்வொரு
நொடியும் உருவாக்கி..உருவாக்கி
இன்னும் அயராமல் உருவாக்க முயல்கிறோம்.
நீ கண்ட நான் இன்னும் ஒரு உலகில்
புதையுண்டு போயிருக்கலாம்
அதை நீதான் கண்டெடுக்க வேண்டும்.
புதையுண்ட என் நீ எங்கிருக்கிறாய்
என்பதே என் தேடலும்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புதியதோர் ஜென்மம் புதியதோர் கிரணம்
அந்த ஒளியில் நாம் தென்படுகிறோமா
என தேடிச் சொல்!

யாருக்கு யார்?

நீ எல்லாமாய் இருந்தும்
இல்லாமலிருக்கிறாய்
கண்ணில் பட்டும்
காணாமல் இருக்கிறாய்
எட்ட இருந்தும்
கிட்டத்து உறவு என்கிறாய்
தெரிந்தும்
தெரியாமலிருக்கிறாய்
அறிந்தேன் என்று சொல்லுமுன்
அரிதாய் சிரிக்கிறாய்
அதனால் சொல்வேன்
கடவுளும்
காதலியும்
ஒண்ணு.