"Poems in Focus"
(Poems of Germany Na.Kannan)
மணம் தேடும் மனம்
கோடிவீட்டு
இராக்கு
இராத்திரிக்கு
என்ன சமைச்சாள்
என்பது
கருவாட்டிற்கு
மட்டுமே
தெரியாது.
அது
மணமா
நாற்றமாவென்று
(இரண்டும் ஒன்று
என்று சொல்லும்
பழம் பெருச்சாளி)
பட்டி மண்டபமிடும்
அடுத்த தெரு
ஐயர் கூட்டம்.
கடற்கரை போய்விட்டு
வந்த பிறகும்
ஆடைப்பிசுக்குடன்
அறைக்குள் வருகிறது
கடற்பாசி நெடி.
மல்லிகை மணத்துடன்
உன் கூந்தல் கூடிய போது
பிறந்தவன்
இன்னும்
தூளியில்
தூக்கம்.
நீ
போய் விட்டாய்
என்ற போதும்
உன்
அக்குள்
மணம்
சொல்லும்
அலசாத
ஜாக்கெட்டு.
````````````````````
'script error'
நீ
நானாகவும்
நான்
நீயாகவும்
தானிருந்தோம்.
வளராமலே
இருந்திருக்கலாம்..
எழுதாத
சிலேட்டுப் போல்
புத்தம் புதிதாய்...
நிறைய
எழுதிக்
குவிச்சாச்சு
இடைப்பட்ட காலத்தில்.
பாதி நான் எழுதியது
மீதி நீ எழுதியது
என்பதுடன்
யார், யாரோ
எழுதிய வாசகங்கள் வேறே!
கணிப்பொறி போல்
உளப்பொறி
வாசித்த போது
இரு வேறு
சரக்காகிப் போனோம்.
script error
என்பதை
debug செய்ய
முடியாமலே
போய்விட்டது.
நீ
நீயாகவும்
நான்
நானாகவும்
நிற்கின்றோம்.
இடையில்
காலம்.
`````````````````
காப்புறுதி
குட்டி நாயுடன்
அலைகிறான்
அலுவலக
காவல்காரன்.
கழுத்தில்
சங்கிலி
ஓடிவிடும்
என்பதற்காக
அல்ல
அதன்
உயிர்
பாதுகாப்பிற்கே.
குட்டி நாயுடன்
அலைகிறான்
அலுவலக
காவல்காரன்.
ஒருநாள்
காவல்காரனைக்
காக்கும்
நாய்
என்று.
````````````````````
பெயர்-ச்சி!
அவனை
அவனுக்குக்
காட்டியபின்
அவனுக்கு
அவனாக
இருக்கப்
பிடிக்கவில்லை.
அவனுக்கு
அவளாகவும்,
அவனாகவும்,
அவையாயும்
ஆகும்
ஆசை
வந்தது.
மலையேறிப் பார்த்தான்
கடல் வந்து பார்த்தான்
கழனி, பாலையென்று
ஐந்தாய் அலைந்தான்.
ஆறில் கிடைக்குமென்று
அசரீரி சொன்னது.
அங்கொரு பெயர்
இங்கொரு விலாசம்
இன்றொரு கருத்து
நாளைக்கு மறுப்பு
இன்னும்...
இன்னும்..
என்று
அலையும்
மனதுடன்
அவையும்
இவையும்
உவையுமென
ஆவியாய்
அலைகிறான்
ஆறாம்திணையில்!
````````````````````
சு(ட்)டும் விழி!
எரியும்
தீப்பந்த
அழகு
கருமைப்
படுதாவில்.
சொக்கப்பனை
எரியும் போது
பறக்கும்
எரி கருக்கு
பார்வைக்கு
அழகு.
எரிந்து
மிஞ்சும்
கரிக்கட்டி
வயலுக்கு
வளமை
என்பது
வழமை.
காலாற
நடந்து
பழகுவது
போல்
நடந்துவிட்டு
வருகிறாள்
அனல்
படுக்கையில்
அகிலா.
தீயில்
பட்ட
அவள்
பாதத்தால்
நெருப்பு
மென்மையாகி
சும்மா
விட்டது
போலும்.
சுடும் போது
இன்பம்..
யாருக்கு?
இல்லைச்
சுடாமல்
விட்டதால்தான்
இன்பமா?
பாரதியிடம்
கேட்க வேண்டும்.
சுட்டும் விழி
சுகத்திற்கு
சுடும் விழி
பரத்திற்கு.
````````````````````
சுழற்சி
அன்றலர்ந்த
தாமரை போல்
அப்பா
படுத்திருக்கிறார்.
பெரிசு
சிறிசு
என்று
குழந்தைகள்
கைச்சூடு
பார்த்துக் கொண்டு.....
நெருநல் உளன்
இன்றில்லை
என்பது
நம்பக்கூடியதாய்
இல்லை.
எது எம்மைப்
பெற்றெடுத்தது
எது எம்மைப்
பிரிந்து நிற்கிறது?
எதுவுமே புரியவில்லை.
ரத்தத்தின் ரத்தமாய்
இருந்ததெல்லாம்
நித்தம் மறைந்து
போகிறது.
அலமலந்து
அன்னாந்து
பார்த்து
அர்த்தம்
ஏதேனும்
உண்டோ
என்று
பிரம்மை பிடித்துப்
போன போது
அருகில் நின்ற
மனைவி
சொன்னாள்
அவள் கர்ப்பம்
என்று.
`````````````````
வகுடு
காலமென்பது
திருப்ப முடியாமல்
வளைக்க முடியாமல்
முசுடாக இருப்பது
அலுப்புத் தருகிறது.
எழுதி
அடித்து
எழுதித்
திருத்தி
வளைத்துப்
போட்டு
எழுதுவது
போல்
வாழ்வு
அமைவதில்லை.
எழுதிய எழுத்து
திருத்த முடியாத
இறைவனின்
பதிப்பாக
அமைந்து விடுவது
சோகம்.
ஒரு முறை,
ஒரே முறை
திருத்த முடிந்தால்
சீர் கொண்ட
வகுடு போல்
நேராக
இருக்கும்
வாழ்க்கை.
```````````````
இருப்பு
தினமொரு கவிதை
எழுதிப்பாரேன்
என்றது மனது.
தினம், தினம்
சொல்லச் சேதி
என்ன உள்ளது?
என்றது
இன்னொரு
புறம்.
ஒன்றும் சேதியில்லை
என்று
உள்ளம் அடக்கி
ஊன் உருக்கிய
சதோரி சாமியார்
சொன்னாலும்
நம்பாதீர்!
சேதியில்லாமல்
வாழ்வு இல்லை.
இல்லை
என்று
சொல்லும்
இருப்புதான்
அங்கு சேதி.
```````````````
Photo-poetry
_____________
கரும்பு கடித்துத் துப்பினாய்
இனிப்பிற்காக எறும்புகள் கீழே
குழலோ கரும்போவென
உன் முகம் பார்த்து நான்
`````````````````````````
அங்கே நில்! அதுவே நல்லது!!
ஆதியிலேயே அப்படித்தான் இருந்தது
அரவம் கூட அஞ்சித்தான் நடக்கிறது
எல்லோரும் எதிரி என்றில்லை
இருப்பினும் ஒரு தயக்கம், சந்தேகம்.
அட, வீரப்புலி கூட எப்போதும்
தாக்கி வீழ்த்துவதில்லை
தயக்கம் அதற்குமுண்டு!
கண்ணுக்குத்தெரியாத ஒன்று
கவனமாய் பழகு என்று சொல்லிப் போகும்.
இந்தக் கவனத்தால் எல்லோரும்
அந்நியராகிப் போயினர்.
ஒன்றுக்கொன்று
உறவிருந்தால்தானா?
அருகில் வந்து அணைத்துக் கோள்ள
அச்சம்..கூச்சம்..பயம்.
ஈடன் தோட்டத்தை
பங்கு போட்டு பட்டா எழுதியாச்சு.
நீ அங்கே! நான் இங்கே!
எல்லோரும் அந்நியமாய்
அவரவர் இடத்தில் அவரவர்
சின்ன வட்டம், பெரிய வட்டம்.
மூச்சு விட வெளியே வந்துதானே
ஆக வேண்டுமென்ற நம்பிக்கையில் நான்
```````````````````````````
கொஞ்சும் உன் மின்னஞ்சல் கண்டு
கெஞ்சும் மரங்கள் வாழ்த்தின!
பஞ்சு இலத்திரன்கள் சிணுங்கின.
`````````````````````````
அட யோகம்!
உன் கதையைக் கேட்டபோது
சிங்காரிச் சித்திதான்
நினைவிற்கு வந்தாள்!
பேருதான் சிங்காரி,
கழுத்து கொஞ்சம் கோணல்
பார்வையும் அப்படியே.
அம்மாவுக்கு
ஒன்றுவிட்ட
உறவு.
ஓடி ஆடும் போது
இவள் மட்டும்
கண்ணீரும்
கம்மலையுமாகக்
கதை சொல்லிக்
கொண்டிருப்பாள்.
என்ன துக்கம்
என்ன சோதனை
என்ன விரக்தி
என நான்
அன்றறியாதவற்றை
அன்று
தந்த
முத்தத்தில்
அந்தவொரு
அணைப்பில்
அன்றே
தந்து விட்டாள்
என்று
இன்று
நான்
உணர்கிறேன்.
```````````````````
சுகந்தம்
பன்றிகளுக்கு
இயற்கையாகவே
சாக்கடையில்
விளையாடப்
பிடிக்கிறது.
நமக்குப்
பன்றிகளின்
செய்கை பிடிக்காதென
அறிந்து கொள்ளும்
நாயும் தயங்காமல்
சாக்கடையில் விழுந்து
விரட்டுகிறது.
விழுந்து சிரித்து
முடிக்கும் முன்பு
நன்றி எதிர்பார்த்து
நம்மிடம் வந்து
சாக்கடைச் சிரிப்புடன்
சிலிர்க்கும் நாயின்
செய்கையும்
நமக்குப் பிடிப்பதில்லை
என்று நாய்க்கு
எப்படித் தெரியும்?
அழுக்கு, நாற்றம், அசிங்கம்
இவை கடந்து
புனித சுகந்தம் தேடும்
மனத்துடன்
உடல் போராடுவது
எரிச்சலாக இருக்கிறது.
உடலுக்கும்
ஊழ நாற்றத்திற்குமுள்ள
தொடர்பு
அநாதி
என்று
காலையில்
பல் விளக்காமல்
சிரிக்கும் போதும்
புரிகிறது!
``````````````````````
நகர்வு
நகர்ந்த வண்ணமே
உள்ளது
நாற்றிசைப் பிரபஞ்சமும்.
காலையில் எழுத்த சூரியன்
கால் கொண்டு நிற்பதில்லை.
விடியாத இரவென்று
விரித்து யாரும்
உரைத்ததில்லை.
மொட்டாகிப் பூவாகி
காயாகிக் கனியாகி
மரமாகி, மண்ணாகி
மக்காகி
விழும் விதைக்குரமாகி
நகர்ந்து கொண்டே
இருக்கிறது வாழ்வு.
நிலைக்குத்தி நிற்க
பூமியில் இடமில்லை.
புவனமும் சுழற்சியில்.
பூப்பூத்த நாளில்
பார்த்தது போலவே
புரியாமல் நிற்கிறாய்
சுழற்சியை
எம்பிக்கொண்டு.
வா!
நிலைக்குத்தும்
இந்நினைவோடு
மண்ணில் சேர்ந்து
மக்கி மரமாகும் வரை!
`````````````````````
வனநேயம்
கன்று எடுத்து, தொட்டி வைத்து
தண்ணீர் ஊற்றி, வேலிகட்டி
மரநடு விழாவில் வனத்தின் தேவை குறித்துப் பேசி
சூழலுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டு
வீடு திரும்பியபோது தபாலில் கவிதை கேட்டுக் கடிதம்.
வளர்ந்த பசு மரங்கள் என்னை வணங்கிக் கேட்டுக்கொண்டபடி
ஒடித்து நெளித்து சுற்றி வளைத்து பதுங்கிப்பாய்ந்து
பயமுறுத்தும் கவிதை செய்யாமல்
ஒத்தைப்புள்ளியில் கவிதையின் சாராம்சம் சொல்லி
திறந்த போனாவை மூடி வைத்து நிம்மதியாய்
உறங்கிப்போனேன்.
````````````````````````````
ஒட்ட வாழும் சிகரங்கள்
சிகரங்கள் பல கொண்ட
மலைத்தொடரை
வாழ்த்தாமல் இருக்க
முடியவில்லை.
எட்டி வானைப் பிடிக்கும் சில
வின்னிலோடும் மின்னலைத்
தன்னுள் கொள்ளும் சில
மண்ணிற்கு நீரூற்றும்
கார் மேகங்களைக்
காதல் செய்யும் சில
வனங்களை உயிர்
இனங்களை வாழ
வைக்கும் பல.
அத்தனை
பாராட்டிற்குமுடைய
சிகரங்கள் கொண்ட மலை
மண்ணில் ஒட்ட வாழும்
சிக்கல் இல்லாமல்.
````````````````````
கனாக்காட்சிகள்
மூடிய பொட்டிக்குள்
முடியாத பல படங்கள்
ஓடிக்கொண்டேயிருக்கின்றன.
மூடிய பிறகு கண்களுக்குள்
எத்தனை காட்சிகள்!
அந்தக் காலத்து
ஊமைப்படங்கள்
ரீல் அறுந்து போய்
பாதி புரிந்து
பாதி புரியாது
டூரிங் டாக்கீஸில்
ஓடிக்கொண்டிருக்கும்.
காசு கொடுத்ததால்
பார்த்துக் கொண்டிருக்கும் சனங்கள்.
இவை போல் தான்
உன் வாழ்வு எனக்கு
என் வாழ்வு உனக்கு
நம் வாழ்வு மற்றவர்க்கு.
எனக்கு மட்டும்
முழு நீள கலர் படமாய்
என் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது
ஓசிப்படமென்பதால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பாதியில் படம் பிடிக்காமல்
போவோருமுண்டு.
````````````````````````````
Matter of habit
________________
நாய்களை இங்கு தெருவில்
காணமுடியவில்லை.
தெரு நாய்கள் இல்லாத ஊர்
சோபிப்பதில்லை.
கூண்டிலிருந்து கொண்டு
தெருவில் நடக்கும்
என்னைக்கண்டு
குலைக்கின்றன
நாளைக் கறியாகப்போகும்
நாய்கள்.
வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு
போக வரும் வியாபாரிக்கு
வாலை ஆட்டிவிட்டு
இரங்கும் என்னை
நிந்திக்கின்றன இந்த நாய்கள்.
நாய்களுக்கு பழக்கம்தான் முக்கியம்
பகுத்தறிவை விட.
``````````````````````````````
வீடு
பனியில் சிறுத்து
இலைகள் உதிர்த்து
மலையில் நிமிர்ந்து
வானை முட்டிய மரத்தின்
நுனியில் நின்றது
அந்த
ஒற்றைக்கூடு.
ஒரு குடும்பம் வாழ்ந்த
வீடு!
வாழ்வு சுருங்கி
சுயம் அடங்குதலும்
சுழற்சியே.
மீண்டும் ஒரு வசந்தம்
வரும்.
வலசை போன பறவை
வரும்.
ஒற்றைக் கூட்டின்
தனிமையை முறிக்க
முட்டை ஒன்று
இரண்டு உயிர்த்தெழும்.
ஒற்றைக்கூடு
அப்போது
மீண்டுமொரு
வீடு ஆகும்.
````````````````
அழியாத கோலங்கள்
ஒன்றின் அழிவில்தான்
மற்றொன்றின் ஜெனிப்பு
என்று சொல்லி
என்னை அழித்து
உன்னைப்
புதிப்பித்துக்
கொண்டாய்.
உந்தன்
புதிப்பித்தலில்
நான் முற்றும்
அழிந்தேனா
என்பதை
உன் புதிய
வார்ப்பிடம்
கேட்டுச் சொல்.
அழியாத நினைவுகள்
எங்காவது
ஒட்டிக்கொண்டு
இருக்கப்போகிறது!
`````````````
மழைக்கால ஞாபகம்
பொய்கையருகே இருந்த
ஓலைக்குடிசையில்
மழைக்கு ஒதுங்கியபோதுதான்
உன் பரிட்சயம் கிடைத்தது.
ஓட்டைக்குடிசையில்
ஒளி தந்ததெல்லாம்
தூரத்து நட்சத்திரங்கள்தாம்.
உன் முகம் அழகாக
இருந்திருக்க வேண்டும்,
ஏனெனில் உன் நிழல்
அழகாக இருந்தது.
கூட இருந்தவர்கள்
சங்கோஜத்தினால்
ஒரு வார்த்தை கூடப்
பேச முடியாமல்
போய்விட்டது.
அந்த நட்சத்திரம்
போலவே
தூரக்கிடக்கும்
உன் நினைவு
என்றும்
ஒளிர்விடுகிறது.
`````````````
மலர் வாசம்
வசந்தம் வந்தது
வந்தன மலர்கள்
வண்டுகள் வந்தன
வண்ணத்துப் பூச்சியும் வந்தது
தேடின தேனீக்கள்
தேடும் இடமெல்லாம்
பூத்துக் குலுங்கின
புதிய மலர் கூட்டம்.
வெட்டியாய் கிடந்த
மண்ணாங்கட்டியின்
இதயப் பூவாசம்
இத்தனை அழகு
என்று வசந்தம்
வந்த போது
சொல்லிப் போனது.
மண்ணில் மலர் இல்லையெனில்
கண்ணுக்கு நிறமில்லை
தொட்டுத்தான் அனுபவிக்க
வேண்டுமென்றில்லை
தூரப்பார்த்தும்
அனுபவிக்கலாம்.
வசந்தம்
வாழ்வின்
அனுபவம்.
மலர்கள்
இல்லையெனும்
உலகில்
இறைவா!
என்னை
நிறக்குருடனாய்
பிறப்பித்து விடு!
``````````````````
கருப்பு/வெள்ளை
கோடான கோடி
வண்ணக்கலவையில்
என் தூரிகை
வரைந்த ஓவியம்
பிரம்மிப்பு
அளிந்திருக்க
வேண்டும்,
இல்லை
கருப்பு
வெள்ளையில்
வரைந்து தா!
அது போதும்
என்றார்கள்.
கருப்பிற்கும்
வெள்ளைக்கு
இடையிலும்
கோடான கோடி
பளுப்புகள்
உண்டென்ற
போது
என் தூரிகை
போனது
வரைந்த
கையுடன்
நிறக்குருடர்
தேசத்தில்.
```````````````````
எல்லைகள்
(1)
கண்கள் சொல்லுகின்றன
காணும் மலையருகேயென்று
நடக்கும் கால்கள் கெஞ்சுகின்றன
இடையில் கிடக்கும் தூரம் கடந்து
கண்கள் சொல்லுகின்றன
நீ எனக்கு அருகிலென்று
இடையில் கிடக்கும் எல்லை
பெரிதென்று எச்சரிக்கும் தாயின் குரல்
(2)
இந்த உபரிக் கவிதைக்கேங்கி நீ
அவனிடம் வரவில்லைதான்
வந்தபின்தான் தெரிந்தது
அவன் முழுச் சொத்தே
இக்காகிதக்கவிதைகள்தானென்று.
கவிதை சோறு போட்டதில்லை
கவிதையின் நிழலான பிரதேசங்களில்
பிரவேசித்திருக்கும் இவனுடன்
ஓடிவிளையாடி அலுத்துப்போன
உனக்கு
அவனால்
தரக்கூடியது
ஒரு
உபரி
கவிதையே.
`````````````````````
குஞ்சு வாயால்
காற்று வந்து
காலையில்
அழைத்தது.
காற்றின் வேகத்தில்
அலைக்கழியப் போகிறோம்
என்றறிந்தே அழைப்பிற்கு
இணங்கினேன்.
இழுத்த இழுப்பில்
பட்ட இடத்தில்
பட்ட படியே
பதிந்தன ரணங்கள்.
மாலை வரும்.
சுத்தம் செய்து
சுகமாக நக்கிக் கொடுத்து..
செய்தொழிலில் அதுவும்
ஒன்று என்றறிக.
குளவியின் கொடுக்கு பட்டபின்
புழுவிற்கு கதியில்லை
குளவிக்குஞ்சு தன்
குஞ்சு வாயால்
சுவைத்து
உண்ணும்வரை.
````````````````````
மாலை ஸ்பரிசம்
அன்று கடல் அமைதியாக இருந்தது
ஆழத்தை மறைத்துப் போர்த்திய மேலாடை
தூரத்து கப்பலசைவால்
சிற்றலையாய் வந்து என்
பாதம் தொட்டபோது உன் ஆழம் புரிந்தது
புன்னகையில் உள்ளம் சொல்லும்
காதலியின் சிரிப்பு போல
அது கப்பலுக்கும் எனக்கும் கூட
தொடர்பைத் தந்தது
வின்னில் பறந்த மாலைக் கொக்குகள்
கிழித்த காற்றசைவு காதில் பட்டது
சொல்லாமல் சொல்லும் உன் காதற் சேதியாய்.
மரங்கள் தளிர்த்தன
மலர்கள் மலர்ந்தன
நாளைச் சூரியன்
வந்து தொடும்
சுகம் நினைந்து.
உள்ளுக்குள் பசித்தது.
பசிதான் வாழ்வு
பசிதான் நெருப்பு
நெருப்புதான் ஓட்டம்.
ஓட வைக்கச் சிரிப்பதும்
ஓடவைத்துச் சிரிப்பதும்
உன் வழக்கமெனினும்
இன்று
உன் புன்னகை
அது தரும் சுகம்
தூரத்துச் சிற்றலையாய்
கொக்கு கிழித்த காற்றாய்
மெல்ல வந்து
என்னைத் தொடும்
உன் நினைவாக
உன் ஸ்பரிசமாக.
``````````````
மழைக்குதவாத வெண்மேகத்திட்டுக்கள்.
பசி வருகிறது. தாய் சோறு போடுகிறாள்.
கிசி வருகிறது. மனைவி கூடிக்கலக்கிறாள்.
மீண்டும் பசி வருகிறது.
தேடுதல் உள்ளவரைதான்
வாழ்விற்குப் பொருள் இருக்கிறது.
எவ்வளவுதான் மழை பொழிந்தாலும்
மரங்கள் மீண்டும் வானை நோக்கி
ஏங்கியே நிற்கின்றன.
வெண்மேகம் தரும் சுகம் வேறு
கார்மேகம் தரும் சுகம் வேறு.
எல்லாமே அழகுதான்
ஆயினும்....
```````````````````````
இனம் காணுதல்
இந்த பாருப்பா!
நீ யாருன்னு எனக்குத் தெரியாது
இந்த வீட்டிலேதான் நீயும் இருக்கேன்னு சொல்லறாங்க
ஆனா, நான் உன்னப்பாத்ததில்லே
நீ வரதும் போறதும் ஒருத்தருக்கும் புரியரதில்லே
நீ பாட்டுக்கு நாங்க தூங்கறப்ப வர
முழிக்கறதுக்குல்ல போயிடற...
நீ இப்படிதான் இருப்பேன்னு
நினைச்சுக்கிட்டு அண்ணே ஒரு படம்
வரைஞ்சான், அத அம்மா பிரேம் போட்டு
பூஜிக்கிறாங்க
இதுதான் நீயான்னு கேட்டா
அதுவும் நீதான் பல படத்தைக் காட்டறாங்க.
கண்ண மூடிக்கிடா தெரிவான்னு
கடைசி வீட்டுச் சாமி சொல்லிச்சு
மூடிக்கிட்டா இருட்டிலே பூச்சி, பூச்சியா பறக்குது
கண்ணத்திறந்து பாருடா!
இருக்கிறதெல்லாம் அவதான்னு
ஒரு முண்டாசுக் கோணங்கி சொல்லிட்டுப் போச்சு.
இருக்கிறது எல்லாமுனா?
இந்த பாருப்பா!
ஒண்ணும் புரியலே.
தூங்கறப்பதான் வருவேன்னா
இன்னிக்கி ராத்திரி
கனவிலே வந்து
இனம்
காட்டிட்டுப் போ!
``````````````````````````
சந்த வசந்தக் கவியரங்கம் - 14
அடுத்து வருபவர் கவிஞர் முனைவர் முனைவர் கண்ணன்
இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்றவர். பாசுர மடல், ஆன்மீகத் தேடல்களால் இவருக்கு இணையத்து முனிவர் என்ற பட்டமும் உண்டு
தமிழக திருப்புவனம் (பழைய இராமனாதபுரம் மாவட்டம்; மதுரைக்கு கிழக்கே 12 மைல்) கிராமத்தில் பிறந்த நாராயணன் கண்ணன் மதுரைப் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியலில் (Biochemistry) முனைவர் பட்டமும், ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக்கழகத்தில் சூழல் வேதியியலில் (ecotoxicology) முனைவர் பட்டமும் பெற்றவர். உடலின் நாளமில்லாச் சுரப்பிகளும், வானம் பாடிக் கவிஞர்களும் தன்னை கவிதை எழுத வைத்ததாகக் கூறும் இவர், கல்லு¡ரி மாணவனாக இருந்த போது எழுதிய கவிதைகள் "கணையாழி" யில் பிரசுரமாகின. முதல் சிறுகதை 1978-ல் "குங்குமம்" இதழில் வெளியாகியது. அகில இந்திய வானொலியில் தமிழில் அறிவியல் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பை சில ஆண்டு காலம் வகித்த இவர், கலைக்கதிரில் விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். "சுபமங்களா"வுடனான தொடர்பின் காரணமாக இவரது படைப்பாற்றல் மீண்டும் பொலிவு பெற்றுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் தொடர்ந்து வெளி வந்தன. கணையாழி, இந்தியா டுடே ஆகிய பத்திரிகைகளில் இப்போதும் இவரது ஆக்கங்களைக் காணலாம். ஐரோப்பியப் புகலிலக்கியப் படைப்பாளிகளின் தொடர்பால் இவரது ஆக்கங்கள் ஐரோப்பாவிலும் வெளியாகின்றன. எழுத்து, இசை, சிற்பம், அறிவியல், மெய்யியல் தத்துவம், அழகியலில் ஈடுபாடு காட்டும் கண்ணன், கீல் (ஜெர்மனி) நகரிலுள்ள ஆல்பிரெக்ட் கிறிஸ்டியன் பல்கலைக் கழகத்தில் சூழலியல் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.
முனைவர் கண்ணன் சரளமும், வளமிக்க தமிழ்ச் சொல்லாட்சியும், கவர்ச்சியான குரலும், விஷய ஞானமும் உள்ள சிறந்த பேச்சாளர். சில வருடங்கள் முன்பு நடந்த மலேசிய தமிழ் கணினி மானாட்டில், பழஞ்சுவடியின் செய்திகளை ஸ்கேனர் என்னும் மின் வருடி மூலம் சேமிக்கலாம் என்ற கருத்தைக் கண்ணன் சொன்னதும், மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு எழுந்து இவர் முயற்சிக்கு ஒரு துவக்கு தொகையாக 10,000 யுஎஸ் டாலர்களுக்கு ஒரு காசோலையை அங்கேயே அளித்தார். கண்ணன் பேச்சை மேலும் கேட்க விட்டால் எங்கே அமைச்சர் தன் சொத்தையே இவருக்கு எழுதி வைத்து விடுவாரோ என்று அஞ்சி, அமைச்சரின் மனைவி அமைச்சரை நல்ல வார்த்தை சொல்லி வெளியே அழைத்துப் போய்விட்டதாகச் சொல்வார்கள்.. 'முதுசொம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து பழய இலக்கியங்களை மின்பதிவாக சேர்க்கும் சீரிய பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். அதில் லாவணி, தாவணி என்று ஏதோ இதுவரை சிறிதளவே வருடியிருந்தாலும் பெரியதாக எதாவது செய்ய வேண்டும் என்ற அவாவுடன் உழைத்து வருகிறார்.
இவரது எழுத்துகளில், இவரது பாசுர மடல்கள் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன. இதில் இவரது ஆன்மீக தேடலும் புரிதலும்புலப்படுவது கண்கூடு.
கவிஞர் முனைவர் கண்ணனுக்கு தலைப்பு 'கடவுளாக நானிருந்தால்...'
கடவுளாய் நானிருந்தால்...
சந்த வசந்த 14 கவிரங்கில் நா.கண்ணன்
வாழ்த்து
திரளும் கூட்டமதில்*
திம்மென்று படுத்துறங்கும்
விண்ணளந்த பெருமாள் வந்திங்கு
கண்ணளக்க வேண்டுமய்யா
கருத்துடனே கவி சமைக்க!
[* நாராயணன் =
நீதான் நித்ய வஸ்துக்களின்
திரளுக்கு ஆதாரம்
நீயே நித்ய வஸ்துக்களில்
நிரந்தரமாய் வாழ்பவன்]
[நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை - திருமழிசை ஆழ்வார்]
அவை வணக்கம்:
செஞ்சொற் கவிகாள்!
செவ்விய மனத்தாள்!
வஞ்சிப்பா கலிப்பா
வகையான இலக்கணம்
கிஞ்சித்தும் அறிந்தேனில்லை.
எஞ்சிய பா வகையுள்
இன்னும் இடம் பெறா வசனகவிதை
உரைவீச்சு என்னுமோர் சொற்கட்டு கொண்டு
மிஞ்சிய பொழுதில் சஞ்சாரம் செய்ய
விஞ்சும் வித்தகர்க்கு
விநயமுடன் விண்ணப்பம்.
தலைவா போற்றி!
எல்லே (ஆ!) சாமி
சொன்னாரென்றால்
சொல்லே போன கிழமும் சிரிக்கும்
¦(க)சால்லு ¦(க)சால்லு என்று.
வல்லோர் அரங்கத்து
அவைத் தலைவா!
வணக்கம் வக்கனையற்று.
*****************************
பா(b)வம்
முண்டாசு தலைக்கட்டி
முகத்தில்கரிக்கோடிட்டு
நெஞ்சை நிமிர்த்திப் பாடும்
சின்னஞ்சிறார் போன்றே
கண்ணன் கடவுளாய் பாவித்து
கவி செய்வதிங்கே!
*******************************
கடவுளாய் நானிருந்தால்
கடுகுக்குள் காரம் போல்
சொல்லுக்குள் சுவை கூட்டி
வானவில்லின் வளைவிற்குள்
வண்ணம் இரண்டு சேர்க்கலாம்.
எட்டுக்கால் பூச்சியின்
எட்டில் இரண்டு கழிக்கலாம்.
தாய்மையின் அழகைத்
தரமுடனே கூட்டலாம்.
ஆழ்வார்கள் பன்னிரண்டை
ஆயிரத்து மூவராக்கி
அறுபத்துமூவரை
அறுபதினாயிரமாக்கலாம்!
கள்ளமில்லாப் பிஞ்சு உள்ளம்
கனியாமல் காக்கலாம்.
பூக்களின் கூட்டதைப் பெருக்கி
பட்டாம்பூச்சிக்கு பரத்துவம் தரலாம்.
கடவுளாய் நானிருந்தால்
சக்கரையின் சுவை கூட்டி
சக்கரை வியாதி ஒழிக்கலாம்.
கல்லுக்குள் தேரை போல்
சொல்லுக்குள் சுரம் வைத்து
சுந்தரமாயக் குரல் தரலாம்.
கணக்கு எல்லோருக்கும் வரவைத்து
கணக்கு வாத்தியார் கூட்டதை ஒழிக்கலாம்:-)
ஓவியத்தைப் பேச வைக்கலாம்
ஒழியாத வயதைக் குறைத்து
ஓடியாட வைக்கலாம்.
கடவுளாய் நானிருந்தால்
செல்பேசி வழியாய் ஒலி, ஒளி மட்டுமேன்?
ஒட்டு மொத்த உடம்பையே அனுப்பலாமென விதி வைப்பேன்.
வரவின்றிச் செலவு செய்யும்
வயதைக் கொஞ்சம் கூட்டுவேன்.
வாலிப, வயோதிக நண்பர்களே! எனக்கூவும்
காளிமுத்து கோஷ்டியை சலாம் கொடுத்து அனுப்பிவிட்டு
கஷாயமில்லாமலே கன்னிப்பெண் சுகம் கூட்டுவேன்.
யயாதிக்கு தந்த வரம்
யாவருக்கும் தந்துவிட்டு
கற்பைக் கழட்டிவைத்து
கண்ணன் கண்ட சுகம்
அண்டத்தில் அனைவருக்கும்
பொதுவென வைப்பேன்.
காதல் சுகமெனக் காட்டும்
கனவுத்தொழிற்சாலை சினிமா வாழ்வை
சாஸ்வதமாக்கி கன்னிப்பெண்களை
கனவுடன் உலவ வைப்பேன்.
பிரிதலைத்தவிற்கலாம்
பிரிந்தவர் கூடலாம்
மறைந்தவர் மறுபடி
மண்மீது தோன்றலாம்
காற்றாடும் மனதைக் கட்டிப்போடலாம்
சோற்றோடும் சுகத்தோடும்
செகத்தினை வைக்கலாம்.
வேறு....
கடவுளாய் நானிருந்தால்
பூமியைச் சமன் செய்யலாம்
கோணலைத்திருத்தி
நட்டக்குத்தாய் ஓட வைக்கலாம்.
பின் பருவ காலங்கள் மாறும்
வசந்தருது நிலவும்
கார்கால மேகமும்
இலையுதிர் நிறமும்
பனியின் சருக்கலும்
இல்லாமலே போகும்.
பூமி கொஞ்சம் கோணலாய்
ஓடினால் என்ன வந்ததது?
நிமிர்த்தி வைத்து
இழப்பதென்ன?
ஹைகூ கவிதை போய்விடும்
எனும் போது
சீர்மையில் இல்லை
ஆக்கம்
சிறிது பிறழ்வு பட்டு
வாழ்வதிலும்
வளமையுண்டு காண்.
கடவுளாய் நானிருந்தால்
கொல்லும் கொடுமையை நிறுத்தி
அன்பில் செழித்திடும் வையமென ஆக்கலாம்.
கொல்லுதல் இல்லையெனில்
மன்னுயிர் பெருகுமே?
வையம் நிறைந்து
வான் வெளி தேடுமே?
கொன்றால் பாவம்தான்..ஆனால்
அதைத் தின்றால் தீரும்!
தின்னும் வெற்றிலை பருகு நீர்
உண்ணும் சோறென உள்ளுள்
புகுந்து உரு மாற்றம் செய்வது
எவ்வளவோ தேவலைதான்.
அண்டத்தின் சூட்சுமங்கள்
அதிகமாய் அறிந்ததில்லை.
தேனுக்குள் சுவையில்லை
சுவைக்கும் மூளைக்குள் தானுண்டு
என்பது போல் பல சூட்சுமங்கள்.
வெளியும் வளையும், காலமும் வளையும்
என்பது போல் சூட்சுமங்கள்.
ஆயிரம் அணுவுலைச் சூரியன்
அண்ட பிரம்மாண்டத்தில்
அடிபடும் சுட்டைக்காய் என்பது போல் சூட்சுமங்கள்.
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத்தருவதுபோல்
உயிர் வேதிமத்தின் பிளவில் சூடுதரும் சுகத்தை வைத்து...
பிரம்ம இரகசியங்கள் பலப்பலவாய் விரியும்
உள்ளுக்குள் உறங்கும் சிம்மம்
கள்ளன், சித்தன்
கனவு நிலை என்றில்லாமல்
தொட்ட தூணிலே துகள் பலவாய்
பிரிந்து மீண்டும் பட்டவர்த்தனமாய்
வந்துடல் பிளந்து நின்றால்
பகலலாம் பதிவுசாய்
கடவுளாய் நானிருந்தால்....
வேறு.....
கடவுளாய் நானிருந்தால்?
கிளுகிளுப்பூட்டும் தலைப்பு!
இரணிய கசிபுவாக நானிந்திருந்தால்.
ஆம்.
ஆசையூட்டும் தலைப்பு
மாபலியாய் நானிருந்தால்.
ஆம்.
மகிழ்வூட்டும் தலைப்பு
மாமன்னன் இராவணணாய் நானிருந்தால்.
ஆனால்..
நானோ வேறொரு ஆசாமி...
அதிகாரத்துவம் தொலைந்து
உலகின் கடைசி மையம் சுருங்கிக் குறையும்
வரை தவமிருக்கக் காத்திருக்கும்
வேறொரு ஆசாமி.
ஆளும் சக்தி
அதற்கொரு பெயர்
ஆண்டவன்
என்று
அறிவிலியொருவன்
சொல்லிப்போக
நாடெல்லாம்
மாபலியாய்
இரணியணாய்
இராவணனாய்
பல்கிப் பெருகி
பரிதவித்துச்
செத்தனர்
பண்டை
முன்னோர்
பலர்.
ஆனால் நான் அவனில் ஒருவனா?
இல்லை!
நான் வேறொரு ஆசாமி.
சக்தி, சக்தி சொல்லடா
முக்தி செல்லும் வழியடா!
என முண்டாசுக்கவி சொன்னாலும்
சக்தி சும்மாய் வருவதில்லை.
சக்தியுள்ளவன்
சலம்ப வேண்டிய அவசியமே இல்லையே!
சக்தியுடன் ஒட்டிக்கொண்டு
பிறந்த உடன் பிறப்பு...
பொறுப்பு அன்றோ!
சக்தி வேண்டும், ஆனால்
பொறுப்பு வேண்டாம்
என்றால்
வெற்பு முறிந்து
பொடிப்பொடியாவது போல்
சக்தி முறிந்து சவமாகக் கண்டோம்.
வேறு....
நான் கடவுளானால் என்று
தலைப்புத் தந்து எம் அறிவுமதிகளுக்கு
வாய்ப்பில்லாமல் செய்துவிட்டனர்.
கடவுள் பொய். கடவுளைப் பிறப்பித்தவன் மனிதன்
என்று சொல்லமுடியாமல் போச்சே!
இருந்தாலும் நாத்திக நண்பன் கூவுகிறான்
நான் கடவுளானால் முதல் ஒழிப்பு
இந்தக் கடவுள்தானென்று!
இதுவொரு அபத்தவாதமென்றாலும்
பொருள் இல்லாமல் இல்லை.
எத்தனை வியாபாரம் கடவுள் பெயரால்?
இழப்பது வெறும் மயிர்தான் ஆனால்
லாபம் நல்லதொரு வாழ்வு
ஆயிரம் அடியார் பாதம் தாங்க
கடவுளுக்கே சபலம் தரும்
கனிவான வாழ்வு.
பொடியன்களெல்லாம் கிளம்பிவிட்டார்கள்!
புராணங்களைத் திருத்தி
புண்ணியத்துவம் பெற்று
அடியார் போல் காட்சி தந்து...
ஊழல் பெருகிவிட்ட சமூகத்தில்,
கடவுள் உண்டென்றென்றாலும் காசு
இல்லையென்றாலும் காசு..
அடடா!
நான் கடவுளானால்?
கடவுளை வைத்துக் கொள்ளவா?
இல்லை வைத்துக் கொல்லவா?
ஆங்...புத்தன் அதைத்தானே செய்தான்.
புத்தமௌனம்
இருப்பதை இல்லையென்று சொல்வதா?
இல்லையென்பதை இல்லையென்று சொல்வதா?
வைத்துக் கொல்வது இதுதானோ?
இருந்தாலும் இந்தத்தலைப்புத் தந்தவர் ஒரு
இராமானுச அடியார்தான் :-)
கடவுள் வேறு, நான் வேறா?
நானறிவேன், நீ அறியாய் எனும்
அத்வைதம் தெரியாதா அவருக்கு?
மாங்காய் மடையா! குழுவில் மாத்வரும் உண்டென்று
மண்டையில் அடிக்கிறான் மற்ற நண்பன் :-)
நான் கடவுளானால்?
கேள்விக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும்
முரண்பாடு எது?
நான் முதன் மந்திரியானால்
இது செய்வேன், அது செய்வேன்!
என்பது போல்தான் இதுவுமா?
குறையிருக்கும் இடத்தில்தானே
ஒரு புதுத்தேவை வருகிறது!
கடவுள் ஏன் குறையுடையவனானான்?
மானுட வாழ்வின் புதிர்களில் இதுவுமொன்று.
மனிதனாய் நானிருந்து கடவுளாய் சிந்திப்பது போல்
கடவுளாய்த் தானிருந்து மனிதனாய் சிந்திக்கவில்லையே அவன்.
எதிலாவது ஓர் வழி வைத்தானா?
ரோமுக்குப் பல வழி என்பதுபோல்
பரமுக்திக்கும் பலவழியென்றான்.
மேற்கே கிருத்தவம், இசுலாம்.
புனிதப்போர்களில் சாக்காடுட்டோர்
புனிதமில்லாப் போர்களில் மாண்டோரிலும் அதிகம்!
கிழக்கே பௌத்தம், சமணம், வேதம், சாக்கியம்,
பைரவம், சைவம், வைணவம், சூர்யம்
காணாதிபத்யம், சைவ சித்தாந்தம்
இன்னபிற கலவைகள்!
காதல் வைத்தான்
காதலில் தோல்வி வைத்தான்
மணம் வைத்தான்
மண(ன)முறிவு வைத்தான்
உறவு வைத்தான்
உறவில் பிரிவு வைத்தான்.
வாழ்வு வைத்தான்
வாழ்வில் மரணம் வைத்தான்.
நெஞ்சு வைத்தான்
நெஞ்சு நிறைய நேசம் வைத்தான்
ஆனால் நெஞ்சிலே குறை வைத்தான்
குறை வழியே முறிவு வைத்தான்.
ஏதாவது ஒழுங்காகச் செய்தானா?
உலகங்கள் கோளமென்றால்
எரி கற்களை சமனற்றுச் சுற்ற வைத்தான்
பரிணாமம் ஒன்று வைத்தான்
பாதியாய் மனிதம் வைத்தான்
உடலென்ற பொறி வைத்தான்
பொறிக்குள் குறை வைத்தான்
மனது வைத்தான்
மனத்துள் அசைவு வைத்தான்
காவி உடை கொடுத்தான்
காவிக்குள் காமம் வைத்தான்
பெருத்த உயிர் படைத்தான்
பேரழிவை உடன் வைத்தான்.
வேறு....
வருபவர்க்கு வழங்க வள்ளல் வையமுண்டு
எடுக்க, எடுக்க குறையா வளமுண்டு அவள் கருவரையில்.
ஆயினும் கால் வயிற்றுக்கு கஞ்சிக்கு வழியில்லாமல்
வாடி உயிர்விடும் வழிநடை மனிதர்கள்.
காமப் பிசாசிற்கு கஞ்சி ஊற்றிக்காணாமல்
கன்னிகள், பிஞ்சுகள், பாலகர்
பாலியல் வல்லுறவிற்குப் பலியாவதேன்?
போர்கள் ஏன்?
மொழிதான் வாழ்வா?
இனம்தான் எல்லாமா?
எல்லைகளை பகுத்தவன் யார்?
நிறத்தைக் கொடுத்தவன் யார்?
தேசியம் உண்மையா? இல்லை
சாதிதான் உண்மையா?
வர்க்கபேதம் வந்ததேன்?
கேள்விகள் கற்பனைக்கு வித்திடுகின்றன.
சொர்க்கத்தில் பேதம் கிடையாது!
சொர்க்கம் போக பாவம் செய்தல் கூடாது!
பாவ மன்னிப்பு உண்டு
அதற்கொரு விலையுமுண்டு!
அடுக்கடுக்காய் கேள்விகள்
அடுக்கடுக்காய் சொர்க்கங்கங்கள்.
பைசாச லோகம், பித்ரு லோகம்,
திரிசங்கு சொர்க்கம், இந்திரலோகம்,
வைகுந்தம், கைலாசம்,
நித்தியசூரிகள், திருநாடு
அடுக்குகளுக்குப்பின்
அமைதியாய் சலமற்று
அப்பிரமம்.
அப்படியே இருந்திருக்கக்கூடாதா?
இருந்திருந்தால்
இந்தக் கன்மம் ஏன்?
யோகம் ஏன்?
பகவான் ஏன்?
பாகவதன் ஏன்?
நாயகன் ஏன்?
நாயகி ஏன்?
கடவுளாய் நான் வந்து என்ன புதிதாய்
சாதிக்கப் போகிறேன்?
கடவுளாய் நானானால்?
வாலைத்தின்னும் பாம்புக் கேள்வியிது!
விடை காண முடியா விஷமக் கேள்விது
விடை சொல்ல முடியா வித்தகக் கேள்விது
எல்லோரும் போய் கண்ணாடி பாருங்கள்!
கோதைக்குக் காட்டியவன்
வள்ளலாருக்குக் காட்டியவன்
நமக்குக் காட்டாமல் விடுவானா?
விடலாம்...
அதனால்?
கவியரங்கம் நடத்தலாம்
சும்மா இருக்கும் சங்கை
சுகமாக ஊதலாம்.
கவிதை இயற்றலாம்
களிதட்டுச் செய்யலாம்.
கேளிக்கை முடிந்தவுடன்
கேள்வி நேரம் முடிந்தவுடன்
பாதித்தூக்கத்தில்
பரிதவித்து விழித்து நின்றால்
பௌயமாய் வந்து நிற்கும்
பதில் தெரியாக் கேள்வி
ஒன்று
.....
எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும்.
......
எம் உற்றம் யார்?
உறவு யார்?
அப்பன் யார்?
அம்மா யார்?
அடிமடியை அரவணைத்து
அழுந்தத்தூங்கும்
அவள்(ன்) யார்?
பரவஸ்து
கேள்வியாய்
கேள்விக்குள் பதிலாய்
கற்பப்பை முட்டையாய்
முடங்கிக் கிடக்கும்
முதலும் முடிவுமாய்
முடிவுறும்
இம்
முற்றுப்
புள்ளி
போ
ல்
.
சந்த வசந்தக் கவியரங்கம் - 14 Published in Santha Vasantham
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கவிஞர் முனைவர் கண்ணனுக்கு பாராட்டு
பாடி அசத்திவிட்டீர்கள்.
நீங்களே கடவுளானா , சனங்க உங்க கண்ணில பட்சணத்தை சும்மா காட்டிட்டு தாங்களே கொட்டிக்கிறாங்க என்ற கோபத்தில்,
சீடை முறுக்கு சுட்டி அதிரசம்
ஆடைத் தயிரோடு வெல்லச் சீடையும்
சாடையாகக் காட்டிடும் மக்காள்!- தாருமே
வாடையேனும் பார்க்கவொரு விள்ளல்.
என்று பாடுவீர்கள் என்று நினைத்தேன். ஆனா பெரிய விசயமா சொல்லிட்டீங்க.
கால்கை உடலில் கண்ணொடு வாயென
காற்றடைத்த கூட்டில் பலவுமிட்டுக் கட்டி
இயக்கும் மூளையில் கேள்வியும் ஒன்று
பதித்தான் 'யார்நீ' எனவே.
ம்..ம்..
காளிங்கன் மீதன்றும் கால்வண்ணம் மட்டுமா
காட்டும் விரலில் தூக்கிய கைவண்ணம்
வாயில் உலகம் சொல்லில் நாவண்ணம்
பாவண்ண மும்பார்த்தோ மிங்கு.
அருமையான கவிதை தந்த கவிஞர் முனைவர் கண்ணனுக்கு பாராட்டுகள்.
`````````````````````
கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன.
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடியபோது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணேய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒருநாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுக்கையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்."
````````````````
சொல்லாக்கிளவி
என்னையறியாமல்
என்னுள் இத்தனை
காலம் எங்கு
நுழைந்தது?
என் சொல் கேளா
என்னுடல் இச்சைகள்
என் சொல் கேளா
இத்தனை குழவிகள்
என் சொல் கேளா
இத்தனை நரை மயிர்
என்னிடம் சொல்லாமல்
கழிந்த என் இளமை
இத்தனை நடப்பிலும்
யார் சொல்லும் கேளா
மனதெனும் குரங்கு
எப்படியிருப்பினும்
என் சொல் கேட்டு
நடக்கவேணும்
என் மனைவி.
````````````````
சாரம்
இரவை ஒழித்து
கனவைக் கிழித்து
கணங்களில்
நிகழ்கிறது
வாழ்வு
மற்றைய
நீண்ட பயணமும்
அடுத்த கணத்தை நோக்கியே
கணத்திற்குப்பின்னும்
வாழ்வு தொடர்கிறது
சாவின்
நிழலில்