என்(இ)மடலின் கவிதைகள் இங்கே

முற்றுப்புள்ளி


இன்று
முற்றுப்புள்ளி என்னை
முத்தமிட்டது!
அதன்
அழுத்தத்தில்
ஆழத்தில்
அடர்த்தியில்
முழுமையில்
முற்றாக
மூழ்கியபோது
எண்ணில்லை
எழுத்தில்லை
எண்ணமில்லை
எழுத என்று
ஏதுமில்லை.
முற்றுப்புள்ளி


``````````````````````


ஆழ்வார்

ஆழ்த்துபவை
அநேகம்.

அயர்ந்த உடம்பினை
ஆழ்தூக்கம் ஆழ்த்தும்.

பண்ணிசைத்துப்பாடும் பட்டுப்போன்ற
பெண்ணின் குரல் பாடப்பாட
ஆழ்த்தும்.

நெஞ்சமெல்லாம் பாசம் வைத்து
நேசமுடன் பிரியும் துயர்
நினைக்காதே ஆழ்த்தும்.

நேசமுடன் இருந்தாலும் நெஞ்சு விம்மல்
நின்ற சோகம் நினைக்க, நினைக்க
ஆழ்த்தும்.

பஞ்சுக் கை கொஞ்சு முத்தம்
தந்து தந்து நின்ற மகள்
கல்யாணப் பெண்ணாகி
கடல்தாண்டிப் போகும்போது
நெஞ்சழுத்தம் ஆழ்த்தும்.

கால் நழுவி கிணற்றில் விழுந்தால்
கன உடம்பு ஆழ்த்தும்.

கவிதை என்று வந்துவிட்டால்
கனித் தமிழ் ஆழ்த்தும்
கருப்பொருள் ஆழ்த்தும்

ஆழ் முத்து தினம் தேடும்
அமைதிக் குளம் தானடுவே
தாமரைப்பூமகள் தண்மலரடி
ஆழ்த்தும்.

ஆழ்த்துபவை அநேகமிருந்தும்
ஆழ்ந்து மூழ்கிச் சாகாமல்
ஆசை மட்டும் வாழ வைக்கும்
அடுத்த கவிதைக்கேங்கி

கரும்பாறைக்கற்களுடன்
கனரகக் கப்பலொன்று
கருநீலக்கடல் வானில்
மூழ்காமல் மிதப்பது போல்
கடந்து செல்லும் என் வாழ்வு
கவிதை மிதப்பு கொண்டு.


கண்ணன்

2மறுமொழிகள்:

Wed Mar 08, 04:57:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger வண்டார்குழலி

ஆழ்வார்! அர்த்தமுள்ள கவிதை... படிப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்துகிறது!

 

Tue Mar 28, 02:05:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger நா.கண்ணன்

நன்றி

 

Post a Comment

<< முகப்பு