கவிதைகள் தொடர்கிறது

கண் பாவை

ஒளியற்ற உலகில்
நிழலற்று இருக்கலாம்
கண்ணுள்ள உலகில்
கனவின்றி இயலுமோ
அன்று நீ வந்தாய்
மீண்டும் இன்று நீ வந்தாய்
கனவின் எழிலில்
கற்பனை கடந்த நிலையில்
கட்டுண்டோம்
களித்திருந்தோம்
எல்லைகளற்ற நிலையில்
வேலியற்று
சாதியற்று
மேலற்று
கீழற்று
சமவெளியில்
சமத்துவமாய்
ஞாலத்தின் ஈர்ப்பின்றி
பரவெளியில் பறவைபோல்
கூடியிருந்தபோது
இது கனவென்றான்
கண் விழித்தோன்
கண் இனி எதற்கென்று
கனவில் நிலைத்துவிட்டேன்
கண்ணின் பாவையாய்
என்றும் நிலைத்துவிடு
உள்ளத்தின் உள்ளே.


``````````````````````````````````````

வடக்கிருத்தல்

இது பொதுவான
தனிக்கடிதம்
நேரு இந்திராவிற்கு
எழுதியது போல்
உன் தேசியக்கவி சொன்னான்
நீ வடக்கிருக்க தமிழகம்
போய் விட்டாயென்று
கேட்டால்
உடல் மண்ணிற்கு
உயிர் தமிழுக்கு என்பாய்
இரண்டும் தமிழுக்கு என்று
அங்கு போய்விட்டாய் போலும்
அந்நிய மண்ணில்
பெய்யும் பனியை வெறிக்க வெறிக்க
எத்தனை நாள் பார்ப்பது?
உன் நாட்கள் கணக்கெடுப்பில் என்றான் கவி
உங்கள் எல்லோர் வாழ்வுமே
கணக்கிலுண்டு என்று எனக்குத் தெரியும்
எனவே இரண்டோடு இது மூன்று
வாழ்விற்கும் பொருளில்லை
சாவிற்கும் பொருளில்லை
என்றாகிப்போன வாழ்வில்
வடக்கிருத்தல் ஒரு குறையோ நண்பா?
ரத்தம் சிந்தா நூற்றாண்டு
புத்தம் புதிதாய் மலரலாம்
அப்போது சிந்த ரத்தம் மண்ணில் இருக்குமோ?
வடக்கிருந்து தென்திசைக் கடவுளாகப் பார்க்கிறாய்
கணக்கெடுப்பு எல்லோருக்கும் உண்டு
வந்து பார்ப்போம் தென் திசை வானில்
ஓர் நாள்.

``````````````````````````````````

மணமாகி வாழ்தல்

அவளை அள்ளி அணைத்து உச்சி
முகர்ந்தபோது விளித்தாள்:
இத்தனை ஆசையும் கிளறிவிடற
சமாச்சாரம்
எதுன்னு எனக்குத்
தெரியும்! என்று.
சிரித்து அவளை மீண்டும்
முகர்ந்தபோது
பின் தள்ளிப் போனான்....
அந்த வீட்டிற்கு நிலைப்படி
கூடக் கிடையாது
சாற்றிய ஓலைத் தட்டிதான்.
இவன் பள்ளி போய்
வந்தபிறகுதான் வருவாள்.
சோறு வைக்கப்போறவளை
பின்னிருந்து
அணைத்து முகர்வான்.
அவ்வளவும் மல்லிகை.
அவள் மனம் போலவே மணமும்.
தோட்டத்தில் மல்லிகையுடன்
உலாவி
மல்லிகை கிள்ளி,
மல்லிகை அள்ளி
மல்லிகை அளந்து
மணத்துடன் வீடு
திரும்புவாள் தலையில்
பூகூட இல்லாமல்.
குளித்துவிட்டு வரேண்டா என்றால்
விடமாட்டான்.
மல்லிகை குளித்தால் மணம் போய்விடும்!
முன் தள்ளிப் போனவளை
மீண்டும் அணைத்து பின் முகர்ந்தான்.
அவன் அன்னையாகவும்
அவளே இருந்தாள்
அன்று.


`````````````````````````

இந்தா புடி வாலண்டின்...

ஆத்தா! நீ பொறந்த போது
நவநீதசுந்தரியா இருந்துருக்கணும்
அதான் அப்பன் ஆத்தா அப்படிப்பேரு வச்சாக
பள்ளிப்புள்ளையா பாத்தப்போ நீ
எனக்கு அப்படித்தான் இருந்தே
பூ, ரவிக்கை கொடுக்கற வயசா என்ன?
அப்போ?
ஏதோ ஒரு கொலுசைத் தூக்கிட்டு
உங்கிட்ட கொடுத்துடணும்ன்னு
ஒம்பின்னாலயே அலைஞ்சேன்!
யாராவது பாத்துப்பிட்டா?
ஆத்து மணல பதிஞ்ச உன்
தடத்தை அப்படியே கையிலே வச்சு
பாத்துக்கிட்டே இருப்பேன்.
அப்புறம் நீ சடங்காயிட்டே,
பள்ளிகூடம் வரவே இல்லை,
நானும் படிக்க பட்டணம் போயிட்டேன்.
வந்து நான் கைபிடிச்சுரிந்தா சாதிக்கலவரமே வந்திருக்கலாம்.
உம் பிள்ளையை பார்வர்டுலே போடறதா?
பேக்வர்டா? அதி பேகவர்டான்னு
நமக்குள்ளே சண்டையே வந்திருக்கலாம்.
சண்டையிலே பிரிஞ்சு கூட போயிருக்கலாம்.
ஆனா, அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலே!
நான் ஊர் திரும்பி வந்த போது நீ
பிடி மண்ணாப் போயிருந்தே.
அப்பவும் கொடுக்கல, இப்பவும் கொடுக்கல
கை நிறைய பூ ஒனக்கு.
ஆனாலும் இன்னிவரைக்கும் நீதான்
என் வாலண்டைன்.


கண்ணன்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு